ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிகாரிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (31) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை விடயதானங்கள் தொடர்பில் நிதி வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்த நிலையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு கேள்வியை முன்வைத்திருந்தார்.

“மத்திய அரசால் வடக்கு மாகாண அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆனால், ஒதுக்கப்படும் நிதிகள் பலவும் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலை காணப்படுகின்றது.இந்த மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இருந்த போதிலும் பல நிதிகள் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ளக வீதிகளைப் புனரமைப்பதற்கு எவ்வளவு நிதி வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேள்வி எழுப்பினார்.